மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியபோது திமுகவினர் உடனிருந்தார்களா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:!
மூன்று மாநில தேர்தல் வெற்றி, மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம். பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கை நிரூபனமாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் 400 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், வேறு சில வழக்குகள் தொடர்பான கோப்புகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அந்த கோப்புகள் குறித்து சிலருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற 35 பேரில்ஒருவர்தான் தனது அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். சோதனை முடிந்த பிறகு, 4 பேர் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். எனில், மற்றவர்கள் திமுகவினரா அல்லது அமைச்சரின் ஆட்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி அளித்த புகாரை டிஜிபி விசாரித்து, மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத் துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கோப்புகள் உள்ளன. எனவே, அங்கு நடந்தது குறித்து டிஜிபி அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகராக உள்ளார் என்றால் அது அப்பாவு மட்டும்தான். அவர் எப்படி சபையை நடத்துகிறார் என்று நமக்கு தெரியும். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பேச முயன்றால், மைக்கை ஆஃப் செய்கிறார். இடைத்தரகர் என்ற வார்த்தையைச் சொல்ல தமிழ்நாட்டில் ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது சபாநாயகர் அப்பாவுதான்.
4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பாஜக வரலாறு படைத்திருக்கிறது. மூன்று மாநிலங்களில் மக்கள் மீதுள்ள அபிமானத்தில் வெற்றி பெற்றுள்ளோம். மத்தியப் பிரதேசத்தில் 163 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு, 2003-ல் இருந்தே ஆட்சி செய்து வருகிறோம். இடையில் 15 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சத்தீஸ்கரில் கடந்த முறை 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றார்கள். இன்று 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். ராஜஸ்தானில் 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதற்குப் பிறகு நடந்த தேர்தல் இது. தேர்தலின்போது, ஓபிசி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி மோடி கேரன்ட்டி கொடுத்தார். இந்த மாநிலங்களில் முதல்வர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தாமல், கட்சியை முன்னிலைப்படுத்தி மோடி கேரன்ட்டி வாக்குறுதி அளித்ததன் மூலம், வெற்றி பெற்றுள்ளோம்.
தெலுங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளோம். எனவே, 2024-ல் 400 எம்.பி-க்களைத் தாண்டி வெற்றி பெறுவது உறுதி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்ககில் எஸ்.சி, எஸ்.டி மக்கள் எந்தபக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டி உள்ளது. தெலங்கானாவில் பா.ஜ.க 8 இடங்களில் வென்றாலும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானித்தன. இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளச்சியாகும். எனவே, 2028 தேர்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். சனாதனம் குறித்த பிரசாரம் வட மாநிலத்தில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை.. சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி கேரண்ட்டியும், சனாதன பிரசாரமும் வடமாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன. தெலங்கானாவில் 2018-ல் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ இருந்தார், 2019-ல் 4 எம்.பி-க்கள் வென்றனர். இப்போது 8 எம்.எல்.ஏ-க்கள் வந்துள்ளனர். 2028 தேர்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும். 2024 தேர்தலில் விந்திய மலைக்கு கீழ் உள்ள 169 சீட்களில் பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.