நாட்டில் கரும்புக்கு மிகக்குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.3,910 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பக்வந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன்மூலம் இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம் என்ற பெயரை பஞ்சாப் பெற்றுள்ளது. நாட்டில் கரும்புக்கு மிகக்குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்திய பஞ்சாப் அரசு, ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.3,800-லிருந்து ரூ.3,910 ஆக உயர்த்தியுள்ளது. இது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கரும்பு கொள்முதல் விலையான ரூ.2,919-ஐ விட கிட்டத்தட்ட ரூ.1,000 அதிகம் ஆகும். ஆனால், இந்த விலையே போதாது என்று கூறி, மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக பஞ்சாப் மாநில கரும்பு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் நிலை இதுவென்றால் தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கரும்பு கொள்முதல் விலையான ரூ.2,919தான் தமிழகத்தில் கொள்முதல் விலையாகும். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் கரும்புக்கு மாநில அரசே பரிந்துரை விலை நிர்ணயிக்கும் நடைமுறை உள்ளது. தமிழகத்திலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டு வரை பரிந்துரை விலை அறிவிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த முறைப்படி, மத்திய அரசால் அறிவிக்கப்படும் விலையுடன் ரூ.650 கூடுதல் விலையாக அறிவிக்கப்பட்டு வந்தது. அதே நடைமுறை தொடர்ந்திருந்தால், கடந்த 6 ஆண்டுகளில் கூடுதல் விலை ரூ.1,000 என்ற அளவைத் தொட்டிருக்கும் என்பதால், தமிழக விவசாயிகளின் கரும்புக்கும் பஞ்சாபுக்கு இணையான விலை கிடைத்திருக்கும்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட, கூடுதல் விலை பரிந்துரைக்கும் முறை திமுக ஆட்சியில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது மட்டுமின்றி, கடந்த ஆண்டு வரை வழக்கமாக வழங்கப்பட்டு வந்த டன்னுக்கு ரூ.195 ஊக்கத் தொகையும் நடப்பாண்டுக்கு இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையான ரூ.2,919தான் தமிழகத்தில் கொள்முதல் விலையாக வழங்கப்படும். இது பஞ்சாபில் வழங்கப்படும் கொள்முதல் விலையை விட டன்னுக்கு ரூ.1,000 குறைவாகும்.
பஞ்சாபில் மட்டுமின்றி, அரியானாவில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,860 வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேச அரசு கரும்பு கொள்முதல் விலையை ரூ.3,750 ஆக உயர்த்தியுள்ளது. வட மாநிலங்களில் கரும்புக்கு இந்த அளவுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இவ்வளவு குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது விவசாயிகளை சுரண்டும் செயலாகும். தமிழகத்தில் ஆண்டுக்கு 2.08 கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு ரூ.1,000 வீதம் விவசாயிகளிடம் சுரண்டப்படுவதாக வைத்துக் கொண்டால், ஓராண்டில் ரூ. 2,080 கோடி சுரண்டப்படுகிறது.
கரும்புக்கான பரிந்துரை விலையை மாநில அரசுகள் அறிவித்தாலும், அந்த விலையை அவை வழங்கத் தேவையில்லை. மாறாக கரும்பைக் கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள்தான் வழங்க வேண்டும். விவசாயிகளின் நலன் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசுகள், அவர்களின் நலனுக்காக கரும்புக் கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயிக்காமல், சர்க்கரை ஆலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் விலையை குறைத்து நிர்ணயிக்கின்றன. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் இரண்டகமாகும்.
தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு சராசரியாக ரூ.3,450 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபமாக, ரூ.1,725 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.5,175 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைவிட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு அதன் பங்குக்கு விலையை உயர்த்தி அநீதியை போக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு நடப்பு பருவத்துக்கு ஒரு ரூபாயைக் கூட ஊக்கத்தொகையாக இன்று வரை அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால், 2016-17ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த, கரும்புக்கு மாநில அரசே பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த விலையுடன் ரூ.1,081 கூடுதல் விலையாக சேர்த்து, டன்னுக்கு 4,000 ரூபாயை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவிக்க வேண்டும். அந்த விலையை அனைத்து சர்க்கரை ஆலைகளும் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.