அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிச.15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல் நலம் தேறியதைடுத்து நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். அப்போது செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதோடு 12-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.