டெல்லியில் நாளை (டிச.6) நடைபெறவிருந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், அக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முக்கிய பங்காற்றினார். மூன்று கூட்டம் நடந்து முடிந்த நிலையில், இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை (டிசம்பர் 6-ஆம் தேதி) டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார் கார்கே. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியானது.
அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தற்போது இந்தக் கூட்டணியில் ஏதோ விரிசல் ஏற்பட்டிருப்பதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது. முன்னதாக, “காங்கிரஸ் கட்சி நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது” என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தி தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
அதோடு, நாளை முக்கியமான தலைவர்கள் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால், அது சரியாக இருக்காது என முக்கியத் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.