கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
வானிலை மையம் எச்சரித்த போதும் திமுக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை அரசு திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர். ரூ. 4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது? முகாமில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. உணவு , மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் முகாம்களில் மக்கள் நன்கு பராமரிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.