4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்: தங்கம் தென்னரசு!

மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தமிழக அரசும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுத்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட 4 மாவட்ட மக்களும் எந்தவித அபராதமும் இன்றி டிசம்பர் 18ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்கள் டிசம்பர் 18-ஆம் தேதி வரை மின்கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்தி கொள்ளலாம். இதேபோல் மின் நுகர்வோர் டிசம்பர் 4 ம் தேதி முதல் 6ம் தேதி வரை அபராதம் செலுத்தியிருந்தால், அது அடுத்த மின்கட்டணத்தின் போது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் மின் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.