மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்.
சமீபத்தில் சென்னையை ஒட்டி கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு, ரூ.5,060 கோடியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மட்டுமல்லாது மத்திய குழுவை அனுப்ப பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய இருக்கிறார். டெல்லியிலிருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 12.20 மணி தொடங்கி 1.10 வரை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார். அவருடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பயணிக்கின்றனர். பின்னர் கார் மூலம் தலைமை செயலகம் வரும் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.