கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசின் அலட்சியம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். புயல், மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிப்புக்குள்ளாகி 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.
ஒரு சொட்டு நீர் தேங்காது என்றார்கள், ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கிய நீரை அப்புறப்படுத்தத் தேவையான ராட்சத மோட்டார்களை தயார்நிலையில் வைத்திருக்கவில்லை. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் சிக்கியவர்களை 5 நாட்கள் கழித்து மீட்பதா. ராட்சத பள்ளத்தில் சிக்கியர்வகள் உடனுக்குடன் மீட்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு. செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை வானகரத்தில் வரும் 26ம் தேதி பொதுக்குழு. செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி விதிகளின் படி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியை அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைவரும் அழைப்பிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.