திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா எம்பி என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக நன்னடத்தை குழு விசாரணை நடத்தி அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் கொந்தளித்து போய் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியதாவது:-
பாஜகவின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்தான் இது. ஜனநாயகத்தை அவர்கள் படுகொலை செய்துவிட்டனர். இது அநீதியானது. மஹூவா மொய்த்ரா இந்த யுத்தத்தில் வெல்வார். மக்கள் மஹூவா மொய்த்ராவுக்கு நீதி வழங்குவார்கள். அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்கும். மஹூவா மொய்த்ராவின் பதவியை பறித்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. “இந்தியா” கூட்டணியுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடும். ஜனநாயகத்தில் இப்படியான நிகழ்வுகள் துரதிரஷ்டவசமானவை. பாஜகவின் இத்தகைய அணுகுமுறை பெரும் துயரத்தை தருகிறது. ஜனநாயகத்துக்கு எப்படி துரோகம் செய்யலாம் பாஜக? மஹூவா மொய்த்ரா தமது நிலைப்பாட்டை தமது நியாயத்தை தெரிவிக்க அனுமதிக்காதது ஏன்? அப்பட்டமாக அநீதி இழைத்துவிட்டார்கள். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்க பாஜக தலைவரும் லோக்சபா எம்பியுமான சுகந்த மஜூம்தார் கூறியதாவது:-
இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியும் கூட 10 எம்.பிக்களை ஒரே நாளில் சஸ்பென்ட் செய்திருக்கிறதே. இப்படி நடப்பது ஒன்னும் முதல் முறையும் அல்ல. ஆனால் மேற்கு வங்கத்தில் இப்படி நிகழ்வது இதுதான் முறை. நன்னடத்தை குழுவின் முன்பாக மஹூவா மொய்த்ரா அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் தரப்பு வாதத்தையும் மஹூவா மொய்த்ரா முன்வைத்தார். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மஹூவா மொய்த்ரா தப்பி ஓடக் கூடாது. இவ்வாறு சுகந்த மஜூம்தார் கூறினார்.