சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது: சந்திரசூட்

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கலந்துகொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவின் பயணம் மிக தனித்துவமானது என்பது குறித்து விவரித்த அவர் கூறியதாவது:-

சமீப காலமாக உலகம் முழுவதும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் காட்டுத்தீயைப் போல பரவி வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவம் வலது, இடது, மையம் என பிரிந்து கிடக்கிறது. இதில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத கருத்துக்களும் பரவி வருகிறது. இதே நிலை இந்தியாவிலும் விதிவிலக்கல்லாமல் தொடர்கிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி. கருத்துகளை ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் மனப்பான்மை, மற்றும் சமூகங்களுக்கிடையே சகிப்புத்தன்மையற்றதுமே முக்கிய காரணம். மேலும் இது சரிவர தொழில்நுட்பத்தை பயன்படுத்த தவறியதன் விளைவு.

இந்தியாவுடன், பல நாடுகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் அவற்றில் பல நாடுகள் உண்மையான தன்னாட்சியை (self governance) நிலைநிறுத்த முடியவில்லை, அதே நேரத்தில் இந்தியாவால் அதன் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடிந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகளில் இந்தியா தன்னாட்சி மற்றும் ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் மேன்மையுடன் செயல்படுகிறது. இதற்கு காரணம், இந்தியா பிற நாடுகளைப் போல் அல்லாமல் ஜனநாயக கோட்பாடுகளை முழுமையாக உள்வாங்கியது மற்றும் அனைவருக்குமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதே என சிலர் கூறுகின்றனர்.

பலதரப்பட்ட கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களையும் தாய் உள்ளத்தோடு அணைத்துக்கொண்டதுதான் இதற்கு காரணம் என மற்றும் சிலரும் கூறலாம். பலதரப்பட்ட கலாச்சாரம் மற்றும் அதை புரிந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கும் தன்மை இந்தியாவை மற்ற ஜனநாயக நாடுகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. ஒரு சிறந்த சமுதாயத்தை அமைக்க முழு மனதோடு பொது சேவை செய்யும் தன்னார்வலர்களால்தான் முடியும். அந்தப் பாதையை தேர்வு செய்ய தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்வுகளில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதை ஒரு சிலரால் மட்டுமே கடக்க முடியும், அதோடு முழு மனதோடு பொது சேவையிலும் ஈடுபடவும் முடியும்.

நீதிபதிகள் பல நேரங்களில் அநீதிகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள். அவற்றை சட்டத்தின் வழியில் தீர்வு கண்டு, சிறந்த சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு முறையும் முயலும் போது, பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.