வெள்ள நிவாரண டோக்கன் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்: உதயநிதி!

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதி கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமான நிலையில், தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரணம் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக கையிலேயே வழங்கப்பட இருக்கிறது. நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பிறகு, ரேஷன் கடைகளில் நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்பட இருக்கிறது. எப்போது முதல் தங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டோக்கன் வழங்கும் தேதியை கூறியுள்ளார். சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு கொடுத்த நிதி தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை. தமிழக அரசு கோரியுள்ள ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் நண்பர் தானே.. அவர் மத்திய அரசிடம் பேசி நிதியை பெற்றுத் தர வேண்டும்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் வரும் 16ஆம் தேதி முதல் வழங்கப்படும். தொடர்ந்து, ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிவாரணத் தொகை வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை முழுவதுமாக வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.