சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளர்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் தனது கொடூர கோர தாண்டவத்தை நிகழ்த்திவிட்டு கரையை கடந்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மிக கனமழை காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் இன்றியும், இணைய சேவை முடங்கியதால் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5வது நாளாக இரவு, பகல் பாராமல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி கேட்ட நிலையில், மத்திய அரசு சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 450 கோடியை ஒதுக்கியுள்ளது. நேற்று முன் தினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் சென்னை வந்தார். முடிச்சூர், வரதராஜபுரம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேற்று காலை பார்வையிட்டார். என்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறித்து அவருக்கு அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் சந்திரசேகர், “பிரதமர் நரேந்திர மோடி சென்னை மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவித்ததோடு, சென்னை சென்று மீட்பு பணிகளை பார்வையிடவும் எனக்கு உத்தரவிட்டார். புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு வர துணையாக நின்று அனைத்து உதவிகளையும் செய்வார்” என்று தெரிவித்தார்.மேலும், நான் டெல்லி சென்றவுடன் பிரதமரிடம் சென்னை வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்கவுள்ளேன். இந்தப் புயலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு வரும் வரை பிரதமர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி அரசு எப்போதும் நமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என்றும், மேலும் எந்த ஒரு நபரும் விடுபடாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளை இன்று மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். மத்திய அரசு உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தேன் எனவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் சந்திரசேகர், “4 நாட்கள் வெள்ள நீர் தேங்கியதற்கான காரணங்களை கண்டறிய தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.