தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான் என்றும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை எதுவுமில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து நிற்கும் நிலையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகள் வாயிலாக அவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன், புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் என்று சுட்டிக்காட்டினார்.
பேரிடர் மேலாண்மை நிதியாக தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல், வெறும் ரூபாய் 6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது என்று குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ. 2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ. 5,400 வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்ததாகவும், இதன் அடிப்படையில் தான் ரூ. 10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
அனைத்து மாநிலங்களும், பேரிடர் காலங்களில், இழப்பீடாக இந்த தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல தவறான தகவல் அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக, மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை. எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.