பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. சுப்பிரமணி அவர்கள், “பெரியாரின் போர்க்களங்கள்”, “மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அதனால், அவருக்கு பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் ‘பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறாமல் எப்படி நூல்கள் வெளியிடலாம்’ என விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. இது அவரை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். இத்தகைய சனநாயக விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்னும் நூலாசிரியர் இரா.சுப்பிரமணி பல்கலைக் கழகத்திலுள்ள ‘பெரியார் இருக்கைக்கு’ இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கல்வி நிலையங்களில் சனநாயகத்தைக் கற்பிக்கும் ஒரு பேராசிரியரின் சனநாயக உரிமைகளைப் பறிப்பது ஏற்புடையதல்ல. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிர்வாக விதிமுறைகளைப் பற்றிக் கவலைப் படுகிறாரா? அல்லது பெரியாரைப் பற்றி அவர் நூல் எழுதியதற்காக ஆத்திரப்படுகிறாரா? என்னும் கேள்வி எழுகிறது. துணை வேந்தரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.
பேராசிரியர் இரா. சுப்பிரமணி அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த சனநாயக விரோதப் போக்கையும், துணைவேந்தரின் சனாதன அரசியல் நடவடிக்கையினையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கருத்துரிமை உள்ளிட்ட சனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட சனநாயக சக்திகள் அனைவரும் இத்தகைய சனாதன ஃபாசிச சக்திகளுக்கு எதிராக அணி திரள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.