ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இந்த தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என்றும் ஒன்றுபட்ட இந்தியாவை கட்டி எழுப்பும் உறுதிப்பாட்டின் சான்று என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும். மேலும் உச்ச நீதிமன்றம் நமது ஒற்றுமையின் சாராம்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசைக்க முடியததாக இருக்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். வளர்ச்சியின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், சட்டப்பிரிவு 370 காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பலன்கள் கிடைக்கும். இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறது. அதோடு வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11) தனது தீர்ப்பை வழங்கியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்றும் மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.