“தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வேளாண் பெருங்குடி மக்கள் தங்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துல் உள்ள அணைகளிலிருந்து, அணைகளில் உள்ள நீர் இருப்பிற்கு ஏற்ப, ஆங்காங்கே கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ள நிலையிலும், பாசனத்துக்காக மேற்படி கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, சுமார் 9,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி காய்ந்து போயுள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், நீர்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடமும் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம், பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டும் இது நாள் வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைக்கு தி.மு.க. அரசு செவி சாய்க்காத நிலையில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மண்டபத்திற்கு சென்று, அங்குள்ள அவருடைய சிலைக்கு மனு அளித்து நூதன முறையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் திறந்து விடக் கோரி, பாரதிய கிஷான் சங்கம் மற்றும் முல்லை சாரல் விவசாய சங்கம் சார்பில் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்த்தும், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம், பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை தி.மு.க. அரசு செயல்படுத்துவதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் செயல் பாடுகளைப் பார்க்கும்போது, நீர் மேலாண்மையில் தி.மு.க. அரசு செயலற்றதாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.