நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என எதிர்பார்க்கவில்லை என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களும் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. காஷ்மீரில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து இரண்டு பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களில் ஒருவர் என மூன்று பேரை காஷ்மீர் சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்க வகை செய்யும் அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்று இருந்தன. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, புதிய மற்றும் வளர்ந்த காஷ்மீருக்கான தொடக்கம் இது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் காஷ்மீர் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்டு இருக்கும் இரண்டு மசோதாக்களும் கடந்த 75 ஆண்டுகளாக உரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் இருக்கும் என்றார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் தாமதமானது. நேருவின் இரண்டு தவறுகளான காஷ்மீரில் தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட போர் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றது ஆகியவற்றால் அந்த பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவருக்கு வரலாறே தெரியாது எனவும் அதனால் வரலாற்றை மாற்றி எழுதி வருவதாகவும் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உள்துறை அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்றும் எதிர்பார்க்க கூடாது. ஏனென்றால் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். இது போன்ற பேச்சுக்கள் எல்லாம், சாதிவாரி கணக்கெடுப்பு என்ற அடிப்படைப் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பவும், நாட்டின் செல்வம் எங்கே போகிறது? என்பதை மறைக்கவும் செய்யும் செயலாகும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே இப்படி பேசுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.