அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

மக்களவையில் பார்வையாளர்களாக வந்த சிலர் அத்துமீறிய சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழக்கம்போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. மக்களவையில் மதியம் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எம்பிக்களின் இருக்கையின் மீது இளைஞர் ஒருவர் குதித்திருக்கிறார். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து யாரோ தவறி விழுந்துவிட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில விநாடிகளில் இளம் பெண் ஒருவரும் இதேபோல எம்பிக்களின் சீட் மீது குதித்திருக்கிறார். அப்போதுதான் எம்பிக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உடனடியாக அவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றைய வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியுள்ளது. இது லைட்டான மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை நாடாளுமன்ற காவல்துறையினரும், எம்பிக்களும் பிடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவையினுள் இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே, வண்ண புகை வீசும் பட்டாசு போன்ற பொருளை கொண்டு இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சமே பாதுகாப்பு என்றுதான் சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில், இது போன்ற அத்துமீறல் எப்படி நடந்தது? என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறு ஆய்வு செய்யக் கோரியும், தீவிர கண்காணிப்பையும், பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

மக்களவையில் நண்பகல் 1 மணியளவில் பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள்ளே 10-12 அடி உயரத்திலிருந்து தாவி குதித்த இளைஞர்கள், ‘தானா சாஹி நைச் சலேகா’ என்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர். ‘சர்வாதிகாரத்தை ஏற்க இயலாது’ என்பதே அவர்களின் முழக்கம். அவர்கள் வீசியடித்தது கண்ணீர்ப்புகை அல்ல. ஏதோவெரு நெடி மிகுந்த வேதிப்பொருளின் புகை. அதனைப் பரவச் செய்யும் குப்பியைத் தமது காலணி (ஷூ)களில் மறைத்துக் கொண்டு வந்து அவையில் வீசியுள்ளனர். உடனே மஞ்சள் வண்ணப்புகை அவையெங்கும் பரவ, அங்கிருந்த உறுப்பினர்கள் அது நச்சுப்புகையோவென அஞ்சி பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். நாட்டையாளும் உயர் மன்றத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலகுவதே அறஞ்சார்ந்த நேர்மைத் திறமாகும். மக்களவைக்குள்ளே வரும் அனுமதிக்காக அந்தப் பார்வையாளருக்குப் பரிந்துரைத்த பாஜக உறுப்பினரை உடனே பதவி்நீக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.