ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்குமா? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமும் விமர்சித்திருந்தது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக மசோதாக்களுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பதற்கு பதிலாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார். ஆளுநரின் இந்த முடிவு சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில், “நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்துப் பேச முதலமைச்சர் தயார். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ஆளுநர் தரப்பில், ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயார். ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். முட்டுக்கட்டையை தீர்க்க எதையாவது செய்ய முடியுமா எனப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்குமா? நீங்களாகவே செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் கூறிய பிறகு தான் முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். ஏன் அவராகவே அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், தற்போதைய நிலையைத் தொடருமாறு உத்தரவிட வேண்டும், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற சூழல் ஏற்படக்கூடாது என்றும் கோரினார். அதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், “நாங்கள் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அது நன்றாக இருக்காது. மசோதாக்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்குச் சென்றிருந்தால், அவர் செயல்பட வேண்டாம் என நாங்கள் கூற முடியாது. எனவே இந்த விவகாரத்தை அட்டார்னி ஜெனரல் கவனிக்கும்படி அறிவுறுத்துகிறேன்” என்றார். இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.