டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்பட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசில் காலியாக உள்ள பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் -1, குரூப்-2 மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசு வேலை என்னும் கனவில் லட்சக்க்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறார். டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது கண்டனத்திற்குரியது என்றும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளின் அடிமட்ட பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை தேர்வு செய்யும் தேர்வாணையத்திற்கு தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர்களின் பதவியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமலே இருப்பதாகவும், இது லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளில் ஓய்வு பெறுவோரின் காலிப் பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தினகரன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியிருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர்வாணைய செயலாளர் மாற்றம், அட்டவணை அறிவித்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம், தேர்வு நடத்துவதில் குழப்பம் என பல்வேறு புகார்களில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சிக்கித் தவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார் தினகரன். நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை தற்போது வரை வெளியிடப்படாத சூழலில், மேலும் தாமதமாகுமோ என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் ரிசல்ட் வெளியிடப்படாமல் இருப்பதும், அக்டோபர் மாதம் வெளியாக வேண்டிய 2024ம் ஆண்டு தேர்வு அட்டவணை இதுவரை வெளியாகாமல் இருப்பதும் தேர்வர்களுக்கு தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக, “அரசுப்பணிக்காக முயற்சிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டாமல் டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர், செயலாளர் உட்பட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அட்டவணை தொடங்கி பணி நியமனம் வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் முடிக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.