கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்

தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும் கோவை தெற்கு தொகுதியுமான வானதி சீனிவாசன் இன்று தனது சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன் அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டுவெடிப்பு என பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கோவை மீண்டு வருவதற்குள் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2953 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் வெளியான பதட்டம் தணிவதற்குள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கோவை மத்திய சிறைச்சாலையில் தீவிரவாத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

காலம் தாழ்த்தாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும். அப்போது தான் முழு உண்மைகளும் விரைவாக வெளிவரும்! தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது. இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.