மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நிலையில், முதல்வர் இந்த சந்திப்புக்கு இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில், ஆளுநரின் அழைப்பு பற்றி பேசியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், மசோதாக்களை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை ஆளுநர் முடக்கி வைக்க முடியாது என தெளிவுபடுத்தியது. அதோடு, ஆளுநர் – முதலமைச்சர் இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தது.
இதனையடுத்து மசோதாக்கள் ஒப்புதல் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வரும் ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து முதலமைச்சருக்கு அழைப்பு சென்றது. ஆனால், இந்தச் சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை. ஆளுநரின் அழைப்புக்கு, தமிழக முதல்வர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது புயல் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனவே வேறொரு நாளில் சந்திக்கலாம் எனப் பதில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், சந்திப்பை ஒத்திப் போட்டிருக்கும் தகவல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளேடு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேட்டி கண்டுள்ளது. இந்த நேர்காணலில், நீங்களும், ஆளுநரும் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநரும் உங்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா? என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “நான் பல முறை ஆளுநரை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். நாங்கள் பல அரசு நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் என்னுடன் நல்ல முறையிலேயே பழகியுள்ளார். இங்கே சந்திப்பது என்பது பிரச்சினையே அல்ல. ஆளுநர் தனது மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநில நனுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும், மாநிலக் கொள்கைகளுக்கும் எதிரான சக்திகளின் கைகளில் கைப்பாவையாக இருப்பதை அவர் தவிர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.