யாருடைய வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள்: தமிழிசை

இலாகா இல்லாத ஒரு அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள். எந்த வரிப்பணத்தில் அவரை இலாக இல்லாத அமைச்சராக வைத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள பல அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக கட்டி கட்டியாக எடுத்தார்கள். இது யாரோட வரிப்பணம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.5000 கோடி நிவாரணம் உடனடியாக வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசோ ரூ.450 கோடியை மட்டுமே வழங்கியது., இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?” என அமைச்சர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனிடையே, புயல் நிவாரணத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர், “அவர்கள் கேட்டதும் பணம் எடுத்துக் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?” என கூறினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு ஆவேசமாக பதிலளித்த உதயநிதி, “நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம். எங்களின் வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் கூறிய இந்த கருத்து பாஜகவினரை டென்சன் ஆக்கியுள்ளது. எப்படி மத்திய அமைச்சரை பார்த்து உதயநிதி மரியாதை இல்லாமல் பேசலாம்? என அக்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார் என்றார். இது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது “நான் மரியாதைகுறைவாக யாரையும் பேசவில்லை.. மாண்புமிகு ஆளுநருடைய அப்பாவின் சொத்தில் இருந்து கேக்கவில்லை. மாண்புமி ஒன்றிய அமைச்சருடைய அப்பாவினுடைய சொத்தை யாரும் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கட்டக்கூடிய வரிப்பணத்தில் இருந்துதான் கேட்கிறோம்’ என்றார்.

இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதியின் மேற்கண்ட பேட்டி குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை கூறியதாவது:-

கேட்பதற்கான விதம் ஒன்று இருக்கிறது. அதுதான் மரியாதையாக கேட்பது என்றால் நான் ஒன்றும் சொல்ல முடியாது. மக்கள் வரிப்பணத்தை பற்றி உதயநிதி பேசுகிறார். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். மரியாதைக்குரிய மாண்புமிகு மாநில அமைச்சர் தம்பி உதயநிதியிடம் கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தை பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். இன்று இலாகா இல்லாத ஒரு அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள். எந்த வரிப்பணத்தில் அவரை இலாக இல்லாத அமைச்சராக வைத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள பல அமைச்சர்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக கட்டி கட்டியாக எடுத்தார்கள். இது யாரோட வரிப்பணம். அப்பன் வீடு என்று சொல்லும் போது: மக்களுக்கான பணமா? அல்லது உங்களுக்கான பணமா..

மக்களுக்கான வரிப்பணம் குறித்து இவ்ளோ கவலைப்படுகிறீர்கள். மக்கள் வரிப்பணத்தை பற்றித்தான் நான் சொல்கிறேன். யாருமே கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. எல்லோரும் அந்ததந்த நேரத்தில் தகுதி வாய்ந்த நேரத்தில் அதுவும் தமிழ்நாட்டிற்கு எதாவது கொடுக்கப்பட வேண்டும் என்றால் குரல் எழுப்ப நானும் தயாராக இருக்கிறேன். எந்த மாற்றுக்காருத்தும் இல்லை. கேட்பவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். யாருமே பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் ஏதோ பாரபட்சமாக நடந்து கொள்வது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். அப்பா வீடு என்று கேட்டால் பராவாயில்ல்லை. அப்பன் வீடு என்று சொல்லும் போது கலோக்கியலாக சொல்லலாம். கேட்ட முறை தவறாக எனக்கு தோன்றியது. எனவே அதற்கு நான் பதில் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.