பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மக்கள் உள்ளனர் என்று அண்ணாமலை கூறினார்.
பா.ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் மண், என் மக்கள் பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதற்காக திண்டிவனம் சென்ற அவர் இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேரு வீதி வழியாக பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் காந்தி சிலை அருகில் பாதயாத்திரையை முடித்த அவர் திறந்தவேனில் நின்றவாறு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மோடி 3-வது முறையாக பிரதமராக வந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் இருக்கும். இங்கு அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் எண்ணுகிறார்கள். தமிழகத்தில் எல்லா இடத்திலும் மாற்றம் என்கிற வார்த்தையைத்தான் மக்கள் பேசி வருகிறார்கள். 70 ஆண்டுகால திராவிட ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே மக்கள் உள்ளனர். அரசியல் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர். மக்களின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சூழலில் தான், மத்திய அரசின் அதிகாரிகள் குழு சென்னையில் புயல் சேதத்தை ஆய்வு செய்ய வந்தது. ஆய்வு செய்து முடித்த அவர்கள் டெல்லி திரும்பும் முன்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புயலை தமிழக அரசு சிறப்பாக கையாண்டிருப்பதாக அவர்கள் நற்சான்று வழங்கினர். இது பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்தியக் குழுவினர் இவ்வாறு தமிழக அரசுக்கு நற்சான்று வழங்கியது குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மிக்ஜாம் புயலை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என ஒருவேளை மத்தியக் குழு அதிகாரிகள் சொல்லி இருந்தால் நீங்க என்ன சொல்லிருப்பீங்க.. பாருங்க மத்திய அரசின் அதிகாரிகள் அரசியல் செய்றாங்கனு சொல்லிருப்பீங்களா மாட்டீங்களா? அதிகாரிகள் எப்போதுமே அரசியல் பேசக்கூடாது. ஒரு மாநிலம் கஷ்டத்துல இருக்கும் போது அதிகாரிகளோ, ராஜ்நாத் சிங் மாதிரியான மத்திய அமைச்சர்களோ அரசியல் பேச மாட்டாங்க. அதனால் மத்தியக் குழு அதிகாரிகள் கூறுவதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இதுவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்னிடம் தனிப்பட்ட முறையில் என்ன பேசினார் தெரியுமா? அதை நான் இங்கு பகிரங்கமாக சொல்ல முடியாது. இன்னொன்னும் சொல்றேன். ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்துட்டு திரும்பும் போது, மிக்ஜாம் புயலை தமிழக அரசு எப்படி எதிர்கொண்டிருக்குனு நீங்க யாராவது கேட்டிருந்தாலும் அவர் நல்லா தான் பண்ணிருக்காங்கனு தான் சொல்லி இருப்பாரு.
அவர் ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சரு. பொதுவான ஆளு. அவர் அரசியல் பேச மாட்டாரு. நீங்களும், நானும் உண்மையை பேசலாம். ராஜ்நாத் சிங் எப்படி உண்மையை பேசுவாரு? அவர் ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சர். அவர் மத்திய அரசு சார்பாக உதவி செய்ய வந்திருக்காரு. அவங்க சொன்னதுக்காக திமுக கோட்டை விட்டதை நாங்க மறைக்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.