நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அது மேகவெடிப்பால் பெய்யும் மழையா என தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடியில் இன்று காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. கனமழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றிலிருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. நெல்லை சமாதானபுரம், மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
திருச்செந்தூரில் 63 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் இந்த ஊர் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 30 முதல் 50 செ.மீ. மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. களக்காடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. தரைபாலங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் உள்ள 3 சுரங்கபாலங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் குறைந்தபட்சம் 36 செ.மீ மழை பெய்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெறுகின்றன. இதுவரை தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கிய 7500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்து வருவதால் முப்படைகளின் உதவியை நாடவுள்ளோம். நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருவது மேக வெடிப்பால் அல்ல, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியே காரணம். சூலூலிரிந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அது போல் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் உள்ள மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. மக்களின் தேவைக்கேற்ப தென் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கபபடும். இவ்வாறு அவர் கூறினார்.