“சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்து பேசினார். “கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. நேற்று மற்றும் இன்று காலை கோவை வரும்வரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் பேசி மழை பாதிப்புகள் குறித்து கண்காணித்து வருகிறேன். சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களை கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்படும்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, கனமழை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அரசு உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்களுடனும் தொடர்ந்து பேசியும் – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தோழர்கள், உடனடியாக களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் – நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.