தருமபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களின் குழந்தைகளுக்கான உயர் கல்விக் கனவு நிறைவேற ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் வேண்டும் என தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

கனமழைக் காலங்களில் கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வழங்கி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் இன்று(டிச.18) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, எம்எல்ஏ-க்கள் அருள், சதாசிவம், முன்னாள் எம்.பி பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:-

தருமபுரி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் சிறிதளவேனும் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. ஆனால், அந்த நிலத்தில் நம்பிக்கையுடனும், மன நிறைவாகவும் விவசாயம் செய்யும் அளவுக்கு நீர்வளம் இல்லை. வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த நிலங்களில் மழைக்காலத்தில் மட்டும் ஒருபோகம் மானாவாரி சாகுபடி செய்ய முடிகிறது. இதன்மூலம், குடும்ப உணவு மற்றும் இதர பொருளாதார தேவைகள் நிறைவேறுவதில்லை என்பதால் பெரும்பாலான குடும்பங்களில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே கிராமத்தில் உள்ளனர்.

மற்றவர்கள் பிழைப்பு தேடி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில கல் குவாரிகளில் வேலை செய்கின்றனர். இவர்களின் குழந்தைகள், கிராமத்திலேயே முதியவர்களுடன் வளர்கின்றனர். இங்கு தான் சமூகச் சிக்கல் உருவாகிறது. பெற்றோர் கண்காணிப்பு இல்லாத நிலையில் முதியவர்களை ஏமாற்றி குழந்தைகள் வழிதவறி சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் பெற்றோர் பள்ளிக் கல்வியுடன் அவர்களுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். குறிப்பாக, பெண் குழந்தைகள் இவ்வாறு உயர் கல்விக்கு செல்ல முடியாமலே மண வாழ்வில் தள்ளப்படுகின்றனர்.

சொந்த நிலத்தில் ஆண்டு முழுக்க விவசாயம் செய்திட தண்ணீர் வசதி இருந்தால் வெளி மாநிலங்களில் தங்கியுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த ஊருக்கு திரும்பி விடுவர். அவர்கள் தங்கள் நிலத்தைக் கொண்டு சுய மரியாதையுடன் வாழ முடியும். இதற்காகவே இந்த திட்டத்தை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருகிறது. இன்று தண்ணீர் தேவைக்காக 1500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கும் நிலை உள்ளது. உபரிநீர் திட்டம் வந்து விட்டால் 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும். எனவே, மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த இலவசங்களும் எங்களுக்கு வேண்டாம். இந்த திட்டம் மட்டும் போதும். மாவட்டத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற இரு கட்சிகளுக்கும் மனசு வரவில்லை.

கனமழைக் காலங்களில் 300-க்கும் அதிகமான டிஎம்சி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. வெறும் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தால் இந்த திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளை நிறைத்து விட முடியும். இத்திட்டத்துக்காக கனமழை கால உபரி நீர் மட்டுமே எடுக்கப்படும் என்பதால் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்தை வலியுறுத்தி மாவட்ட மக்களிடம் பாமக சார்பில் 10 லட்சம் கையெழுத்து பெற்று முந்தைய அதிமுக அரசிடம் வழங்கினோம். அன்றைய அரசு திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டு அறிவித்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. திட்டங்களை நிறைவேற்றும் வகையிலான அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் 6 மாதத்தில் இந்த திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றும் வரை பாமக ஓயாது. மேலும் ஒரு போராட்டத்தை நோக்கி பாமகவை தள்ளாமல் தமிழக அரசு விரைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.