வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம், பல்வேறு இணைப்பு சாலைகளை துண்டித்திருப்பதால் மீட்புகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரின் வேகம், நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்திருப்பதால் மீட்பு படையினர் படகு மூலம் மக்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை மீட்கப்பட்டிருப்பவர்கள் திருமண மண்டபங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை நிலவரப்படி திருநெல்வேலி டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்திருக்கிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வடிந்திருக்கிறது. இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வரும் நிலையில், இம்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று கேள்விகள் எழுந்தன.
மழை வெள்ள பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிவாரணம் குறித்தும் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
காயல்பட்டினத்தில் 30 மணி நேரத்தில் 116 செமீட்டர் மழை பெய்துள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பால் சப்ளை நார்மல் ஆகிவிடும். 323 படகுகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் நிறைய பகுதிகளில் மின் வினியோகம் இல்லை. மின்மாற்றிகள், மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக மின்சாரம் வழங்கினால் மழையினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும். பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் 27 மாடுகள், 297 ஆடுகள் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்து சேதமடைந்துள்ளன. விமானப்படை, கடற்படை, கப்பல்படை மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். மக்களை முழுமையாக மீட்பதே எங்களின் முதன்மையான பணி. இன்னும் சில கிராமங்களில் மக்களை மீட்க வேண்டியதுள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு, சேதங்கள் கணக்கிடப்படும். பின்னர் இது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.