ஸ்ரீவைகுண்டத்தில் மிக ஆபத்தான நிலையில் 800 ரயில் பயணிகள் சிக்கியிருந்த சூழலில், அவர்களில் 300 பேரை தெற்கு ரயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர். மீதமுள்ள 500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருசெந்தூரில் இருந்து சென்னையை நோக்கி 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் தென் மாவட்டங்கள் முழுவதுமாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், மேற்கொண்டு போக முடியாமல் ஸ்ரீவைகுண்டத்தில் பாதி வழியிலேயே ரயிலை ஓட்டுநர் நிறுத்திவிட்டார். ஆனால், தொடர்ந்து மழை பெய்வதால் ரயில் தண்டவாளத்துக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் ரயில் தொங்கி வருகிறது. இதனால் அதில் உள்ள பயணிகள் மிக ஆபத்தான நிலைமையில் மாட்டி இருக்கிறார்கள். சுற்றி வெள்ளம் ஓடுவதால் ரயிலால் மேற்கொண்டு நகர முடியாத நிலையிலும், தண்டவாளம் உடையும் நிலையிலும் பெரும் அச்சத்துடன் 800 பயணிகள் இருந்து வந்தனர். மேலும், நேற்று முதல் அவர்களுக்கு குடிநீரும், உணவும் இல்லாத நிலைமை இருக்கிறது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தரை வழியாக அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது
இந்நிலையில், தெற்கு ரயில்வேயும், பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து ரயிலில் சிக்கியுள்ள அந்த 300 பயணிகளை ரப்பர் படகு மூலமாக சென்று மீட்டனர். ஆனால் தொடர் கனமழை காரணமாகவும், வெள்ளம் அதிகரித்ததாலும் மீதமுள்ள சுமார் 500 பேரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை இன்று மீட்கும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ரெயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு வழங்கமுடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரெயிலில் சிக்கி உள்ள பயணிகள் இன்று மீட்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ‘தொடர்மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிக்கல்கள் நீடித்தன. எனவே அவர்கள் ரெயில் பெட்டிகளிலும், ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக போதிய மின் விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ரெயில் நிலையத்தில் போதுமான அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதால் இன்று பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள். அதன்பின்னர் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ரெயில்வேயின் என்ஜினீயரிங் பிரிவு மற்றும் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து சீரமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.