“இரண்டு மாவட்டங்களே வெள்ளத்துல தத்தளிச்சிட்டு இருக்கு.. ஆனால் நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கூட போஸ் கொடுத்துட்டு இருக்காரு” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வரலாறு காணாத அதிகனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடியை மழை வெள்ளம் கூறுபோட்டு சென்றிருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக அந்த மாவட்டங்கள் காட்சி அளிக்கின்றன. உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, மழை நீர் வடிந்த நிலையில் அந்த மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுதான் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. விளம்பரம் தேடி கொள்வதற்காக மாரி செல்வராஜை உதயநிதி உடன் வைத்திருப்பதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது:-
தென் தமிழகமே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இப்படியொரு பெரு வெள்ளத்தில் தென் மாவட்டங்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு மிக மோசமான நிலைமை நிலவிட்டு இருக்கு. ஆனால், நம்ம முதல்வர் ஸ்டாலின் அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கல. அவர் பாட்டுக்கு டெல்லிக்கு ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துல கலந்துக்க போயிட்டாரு. அவர் போனது மட்டுமில்லாம தமிழ்நாட்டுல இருக்குற தலைர்களை எல்லாம் கூட்டிட்டு போயிட்டாரு..
முதல்வர் தான் இப்படி இருக்காருனு பார்த்தால், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீட்புப் பணிக்கு போறாரு. யாரை கூட்டிட்டு போறாருனு தெரியுமா? மாரி செல்வராஜை கூட்டிட்டு போறாரு. இந்த மாதிரி அநியாயம் எல்லாம் நீங்க எங்கேயாவது பாத்துருக்கீங்களா? அமைச்சர்கள் எல்லாம் பின்னாடி நிக்கிறாங்க. மாரி செல்வராஜ் உதயநதி கூட இருக்காரு. இதை எல்லாம் மக்கள் பாத்துட்டு திமுக ஆட்சி மேல பயங்கர கோவத்துல இருக்காங்க. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.