அமைச்சரே வெள்ளத்தில் சிக்கி 3 நாளுக்கு பிறகு மீட்பு?: அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலினால் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வரலாறு காணாத வகையில் காயல்பட்டிணத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து வீடுகளை மூழ்கடித்தது. இந்த பேய் மழையால் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விவசாய பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடியின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தென் மாவட்டங்களை மீட்பதற்காக அமைச்சர்கள் களமிறக்கப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடியில் மீட்புப் பணிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், கனிமொழி எம்.பி என பலரும் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் உள்ளூர் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை பார்க்க முடியவில்லை என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில்தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கடுமையான வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

கனமழை கொட்டித் தீர்த்த 17ஆம் தேதி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். அதன்பிறகு ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தனது சொந்த ஊரான ஏரலுக்கு சென்றார். அங்கு பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே எங்கும் செல்ல முடியாதபடி வீட்டிலேயே சிக்கிக் கொண்டார். ஏரல் பகுதியில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டதாலும், இணைய சேவை கிடைக்காததாலும் அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் வெள்ளத்திற்கிடையே சிக்கிக்கொண்ட தகவல் தீயணைப்பு துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ் குமார் உத்தரவின் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஏரல் பகுதிக்குச் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இதையடுத்து, அவரும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். முதலமைச்சரால் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக அரசை விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த டிசம்பர் 18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது, மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக ‘இந்தியா’ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு, திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.