அறிவாலயம் என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது: குஷ்பு!

அறிவாலயம் (திமுக தலைமையகம்) என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது என்று நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. குறிப்பாக 2006 – 2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். இந்த சமயத்தில் தனது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்தது. இதற்கான தீர்ப்பு கடந்த 2016ல் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி. பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21ல் அறிவிக்கப்படும் என கூறி ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகி இருந்தனர். இதையடுத்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி, மனைவி விசாலாட்சி மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பற்றி நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஊழல் விஷயத்தில் சகிப்புத்தன்மை என்பது இருக்க கூடாது. ஊழல் அதன் வேரில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். அறிவாலயம் (திமுக தலைமையகம்) என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது. திமுக அமைச்சர் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இதன்மூலம் நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது’’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பை வரவேற்றது மற்றும் திமுக தலைமையகமான அறிவாலயத்தை ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகம் என தெரிவித்ததற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்புவுக்கு எதிராக அவர்கள் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.