பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!

மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்ய கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதனைத்தொடர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்‌சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சஞ்செய் சிங் தலைவராக தேர்வு ஆகியுள்ளார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்‌சி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். ‘நீதிக்காக நாங்கள் உணர்வுபூர்வமாக முழுமூச்சுடன் போராடினோம். ஆனால் கடைசியில் பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் இனி எப்படி மல்யுத்த களத்தில் நீடிக்க முடியும். இத்துடன் மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பஜ்ரங் புனியா, “அன்புள்ள பிரதமரே, நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நாட்டுக்காக வேலை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள். என்றாலும் மல்யுத்த வீரர்களின் விஷயத்தில் உங்களின் கவனத்தை பெற முயல்கிறேன்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நமது மல்யுத்த வீராங்கனைகள் பிரிஷ் பூஷன் சிங் மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை தொடங்கியது நீங்கள் அறிந்திருப்பீர்கள். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின் மூன்று மாதங்கள் ஆனபோதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதிக்கு வந்து போராடினோம். அப்போதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அதன் பலனாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

ஜனவரியில் அவருக்கு 19 புகார்தாரர்கள் இருந்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்துக்குள் அந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. இதன் பொருள் பிரிஜ் பூஷன் 12 மல்யுத்த வீராங்கனைகளிடம் தனது செல்வாக்கை காண்பித்து மிரட்டியுள்ளார் என்பதே. எங்களின் போராட்டம் 40 நாட்கள் நீடித்த சமயத்தில் மேலும் ஒரு வீராங்கனை போராட்டத்தில் இருந்து பின்வாங்கினார். அந்தத் தருணத்தில் எங்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் போராட்ட தளம் இடிக்கப்பட்டது. நாங்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். எனவே, நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவெடுத்தோம். நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம். ஆனால், ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒரு நபரின் தொழில் பார்ட்னரும், அவரின் நெருங்கிய உதவியாளர்தான் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வால் நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன். இன்று முதல் நீங்கள் என்னை மல்யுத்த களத்தில் பார்க்க மாட்டீர்கள். எனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” என்று பஜ்ரங் புனியா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பெண் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனை கண்ணீருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைத்து தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாக்‌சி மாலிக்கும் பஜ்ரங் புனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளனர்.