மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு பின்னர் ஓய்வு குறித்து அறிவித்துள்ள முன்னணி வீராங்கனை சாக்சிக்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான விஜேந்தர் சிங்.
சாக்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங் கூறியுள்ளதாவது:-
ஒரு விளையாட்டு வீரராக சாக்சி மாலிக்கின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் தங்கம் வென்ற அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால் அது அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால், உலக அளவில் இந்தியாவின் பிம்பம் உயருமா? குறையுமா?
ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையும் ஏமாற்றமடைந்துள்ளது. இதற்குப் பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுப்புவார்களா? ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் தங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அவர்கள் கவலை அடைவார்கள். பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் ஏன் இது நடந்தது என்று பதிலளிக்க வேண்டும். இது நீதி அமைப்பின் மீதும், ஜனநாயக கட்டமைப்பின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கும், சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினர். மேலும், பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தாண்டு ஜனவரி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஜுன் மாதம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு நேற்று வியாழக்கிழமை நடந்த தேர்தலில் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் தொழில் கூட்டாளியும், நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவியுடன் 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரிஜ் பூஷணின் அணியினரின் இந்த வெற்றி அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வீர்ர்கள், வீராங்கனைகளின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனிதா ஷியோரன் 7 வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னணி வீராங்கனை சாக்சி மாலிக் கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.