சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்.2 ஆம் தேதி முற்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோவால் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புவியின் தாழ்வட்டப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக அதன் லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன், அந்த இடத்திலேயே சுற்றிவந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று இஸ்ரோ தலைவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, ‘பாரதிய விண்வெளி நிலையம்’ என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது. இந்தியா எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்க முடியாமா என்பதைவிட, ஆனால் அது தன்னால் முடிந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா எப்படி தொழில்நுட்ப ரீதியில் சக்திவாய்ந்த நாடாக மாறப்போகிறது என்பது மிக முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.