மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக பிரிஜ் பூஷண் சிங் அறிவிப்பு!

இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை இடைநீக்கம் செய்து அறிவித்தைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளிட்டார். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் நிலவும் கடும் அதிருப்தி காரணமாக அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியதாவது:-

நான் 12 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். நான் சரியானாவனா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும். ஒரு வகையில் நான் மல்யுத்தத்தில் இருந்து துறவு கொள்கிறேன். மல்யுத்தத்தில் இருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன். இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினர் செய்வார்கள். கூட்டமைப்பு, அரசுடன் பேச வேண்டுமா அல்லது நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டுமா என்பதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது எனக்கு அதிக வேலை இருக்கிறது.

புதிய தலைவராக தேர்வாகியுள்ள சஞ்சய் சிங், எனக்கு நெருக்கமானவரே தவிர உறவினர் இல்லை. மல்யுத்தத்துடன் தொடர்புடைய அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களே. கடந்த 11 மாதங்களாக தேசிய மற்றும் மாநில அளவில் எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. மல்யுத்த வீரர்கள் ஒரு வருடத்தை வீணாக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் புதிய நிர்வாகிகள் அவசர முடிவு எடுத்திருப்பார்கள். மல்யுத்தத்தில் இருந்து எனது ஓய்வு டிச.21 ல் இருந்து அமலுக்கு வருகிறது. இனி நான் எதிர்காலத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

6 முறை எம்பியாக இருக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங், 5 முறை பாஜகவின் சார்பிலும், 1 முறை சமாஜ்வாதி கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் கைசர்காஞ்சி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.