இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெய்ந்த தொழிலாளர்கள் இங்கே பல வேலைகளைச் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் இணையத்தில் பரவி வருகிறது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள், சாலைகள், டாய்லெட்களை சுத்தம் செய்வதில் தான் ஈடுபடுகிறார்கள் என்று தயாநிதி மாறன் கூறுகிறார். அந்த வீடியோவில் தயாநிதி மாறன், “ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையைப் பாருங்கள். இன்று கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்த பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை கற்றுக் கொண்டு இங்கே வந்து வீடு கட்டி தருகிறான். சாலையைச் சுத்தம் செய்கிறான். டாய்லெட் கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை” என்கிறார்.
அவரது இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜேடி(யு), ஆர்ஜேடி மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. திமுக இந்தக் கூட்டணியில் தான் உள்ளது. நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் இந்தி பேசும் மக்கள் குறித்து கூட்டணியில் இருக்கும் இவர் பேசிய கருத்துக்களுடன் உடன்படுகிறார்களா? இந்தி பேசும் மக்கள் மீது உங்களுக்கு எப்படி என்ன இவ்வளவு வெறுப்பு.. திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அதேபோல திமுக எம்பி செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அந்த விவகாரத்திலும் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஷெஹ்சாத் பூனவல்லா சாடியுள்ளார். கடந்த டிச.5ஆம் தேதி நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்பி செந்தில்குமார் பேசுகையில், “இந்தி பேசும் கோமூத்திர மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி வென்றுள்ளது. தென் மாநிலங்களில் பாஜகவால் நுழைய முடியாது” என்று கூறியிருந்தார். அவரது கருத்துகள் நாடாளுமன்றத்தில் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பாஜக மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திமுக தலைவர்கள் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று திமுக தலைமையைக் கூறும் அளவுக்கு நிலைமை சென்றது.