மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார். எந்த வகையில் ஏற்புடையது அல்ல. இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படித்திருக்கிறார் என திருமாவளவன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-
இந்த மண்ணில் சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர். சனாதானமே நமது பகை. அதனை வேரறுப்பது மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்தியவர். அந்த மாமனிதனின் அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். பெரியார் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு அரசியல் கட்சிக்கு உரிமையானவர் அல்ல.. ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் உரிமையானவர் என உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தனது காழ்ப்புணர்வை கக்கி கொண்டிருக்கின்றனர். அவரை வீழ்த்துகிற முயற்சிகளில் பெரியாரின் சிந்தனையாளர்களும், அம்பேத்கரின் சிந்தனையாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு இருக்கிறோம்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண போராளிகள் ஒருங்கிணைத்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து எதோச்சிய அதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது, எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கூட்டத்தொடரிலும் இந்த அமர்வில் முக்கிய மூன்று குற்றவியல் சட்டத்தையும்,சட்டங்களுக்கான மசோதாவையும் நிறைவேற்றி விட வேண்டும் என முடிவு செய்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி எதிர்ப்பு இல்லாமலேயே அதனை நிறைவேற்றியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகற்றுவார்கள்.
வருகிற 29-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு(இவிஎம்) முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
வெல்லும் ஜனநாயக மாநாடு சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெறும்.முதல்வரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம்.
அமைச்சர் பொன்முடி வழக்கு முனைப்போடு எதிர்கொள்வதற்கு திமுகவின் வழக்குரைறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள். பொன்முடியும் மேல்முறையீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி உள்ளார். சட்டப்படி அவர்கள் உரிய தீர்வை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், பாஜகவை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். மெகா ஊழல் சிஏஜி வெளியாகி உள்ளது.இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. ஆகவே, பாஜகவை சேர்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி.ஆனால் பாதிப்புக்கு ஏற்ப புயல் மழை கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.
அதனை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதியாக ஒரு தம்பிடு காசு கூட வழங்கவில்லை.
வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொனியை ஏற்படுத்துகிறார். இது எந்த வகையில் ஏற்புடையது அல்ல. இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.