முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மிக்ஜாம் புயல், வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் பயங்கர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த 7-ம் தேதி வெள்ள சேதத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் 3 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான கீழடுக்கு வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு, அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்திய குழுவினரும், தமிழ்நாட்டுக்கு வந்து, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி டெல்லி சென்றார். அப்போது, வெள்ள நிவாரணம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அதன்படி, அன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார். மேலும், ஏற்கெனவே மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய கோரியபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறும் பிரதமரை வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி உயர்மட்டக் குழு கூட்டத்தை இன்று நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. மாநில அரசு நடத்தும் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மத்திய அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, நிவாரண பணிகளுக்கு துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கூறி, உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரியுள்ளேன். இரட்டை பேரிடர்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார் பிரதமர். மேலும், வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள்வார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.