பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ‘லக்பதி திதி சம்மேளன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஜெய்சால்மரில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துள்ளோம். இந்த இலக்கை அடைய, தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். ஆனால் நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
50 சதவீத மக்களை புறக்கணித்து எந்த நாடும் முன்னேற முடியாது. பெண்களின் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராக இருந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என சர்வதேச ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், அவர்களது வேலைவாய்ப்பின் தரத்தை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டங்களில் பல பாதுகாப்பு மற்றும் ஆதரவான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசின் பல திட்டங்கள் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியாக உள்ளன. அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. ஆனால், பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இன்றும், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பாலின அடிப்படையிலான முன்னுரிமை போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. பெண்கள் சொத்துரிமைக்காக போராட வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் கடன் உதவிகளை பெறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பாலின இடைவெளி என்ற பிளவை விரைவில் நிரப்ப வேண்டியது அவசியம். பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்தை செயல்படுத்துவதும் அனைவரின் பொறுப்பாகும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.