தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த டிச.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தில் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களைக் காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்பு விவரங்களை எடுத்துரைத்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.