“ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திகார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “பாஜகவுடன் எங்களுக்கு உறவு சீராக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால் நாடு நன்றாக இருக்கும். அந்த எண்ணத்தில்தான் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுதான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு. அரசியல் ரீதியாக பழனிசாமி இனி மேலே வரவே முடியாது” என்றார்.
அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை வெளியில் சொன்னால் பழனிசாமிக்கு திகார் சிறைதான் என மேடையில் பேசியது குறித்த கேள்விக்கு, “அதிமுக ஆட்சியின்போது சில தவறுகள் உள்ளே நடந்தன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் சொன்னார். அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. ஒன்றும் செய்யவில்லை. சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா?” என்றார்.
முன்னதாக, தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பில் இருந்தார். அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வர முடியாது என்ற விதியை மாற்றி, கட்சிக்கு துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வராக்கிய சசிகலாவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள் இந்த நம்பிக்கை துரோகிகள். ஜெயலலிதா இறந்த பிறகு டிடிவி தினகரன், 36 எம்எல்ஏக்களுடன் தனியே பிரிந்து, ஆளும் அதிமுகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அப்போது என்னிடம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் வந்து கேட்டுக் கொண்டதன் பேரில் நான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். அன்றைக்கு நான் ஆதரவு கொடுக்காமல் டிடிவி.தினகரன் பக்கம் நின்று இருந்தால், ஆட்சி அப்போதே கைமாறி இருக்கும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரைக்காக தேனி தொகுதிக்கு மட்டும்தான் பிரதமர் மோடி வந்தார். அந்த தொகுதியில் வென்ற ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க நினைத்த போது, எரிச்சலான எடப்பாடி பழனிசாமி நேராக டெல்லிக்கு சென்று அதை தடுத்து நிறுத்தினார். அதிமுகவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆகக்கூடாது என தடுத்து நிறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது அரசை காப்பாற்றிய எங்களுக்கு அவர் செய்யும் நன்றி இதுதான். நன்றி மறந்த நபரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பதவியும், இரட்டை இலை சின்னமும் தற்காலிகமாகத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தொண்டர்களும், மக்களும் நம் பக்கம் தான் உள்ளார்கள். அதிமுகவை மீண்டும் கைப்பற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் ஒப்படைப்பதே எனது நன்றிக்கடனாக இருக்கும்.
அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்காகத்தான் பன்னீர் செல்வம் அரசியல் கடமை ஆற்றுவானே ஒழிய, தனிக்கட்சி தொடங்க நான் எந்நாளும் நினைக்க மாட்டேன். ஒரு தடவைதான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள், என்னென்ன பாடுபடுத்தினார். இரண்டு முறை அம்மா எனக்கு முதல்வர் பதவியை தந்தபோதும் அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டேன். மூன்றாவது முறையாக சசிகலா, எனக்கு முதலமைச்சர் பதவி தரும்போதும் நான் அதை திரும்பக் கொடுத்துவிட்டேன். என்னுடைய பணி நிறைவாக உள்ளது. அதனால் என்னை யாரும் நம்பிக்கை துரோகி என சொல்ல முடியாது.
முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் கையெழுத்து போட்டுத்தான் ஃபைல்கள் அனைத்தும் போகும். நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன். இவ்வாறு ஓபிஎஸ் பேசியுள்ளார்.