மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 11 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என மும்பை ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளுக்கு இன்று இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு இன்று காலையில் 10.50 மணிக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயில் khilafat.india@gmail.com என்ற முகவரியில் இருந்து சென்றது. இந்த இ-மெயிலில் திறந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது வங்கிகள் உள்பட மும்பையில் 11 இடங்களை குறிப்பிட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால் வெடித்து சிதறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக அந்த இ-மெயிலில், ‛‛மும்பையில் ரிசர்வ் வங்கி மற்றும் தனியார் வங்கிகளின் 11 இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளோம். இந்த வங்கிகள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மத்திய அமைச்சர் நிர்லமா சீதாராமன், வங்கியின் உயரதிகாரிகள், மேலும் சில அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் தங்களின் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதோடு மோசடி தொடர்பான முழுவிபரங்களுடன் பத்திரிகை செய்தியும் வெளியிட வேண்டும். இவர்கள் உள்பட மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் மதியம் 1.30 மணிக்கு 11 இடங்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மும்பை போர்ட்டில் உள்ள ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் அலுவலக கட்டடம், சர்ச்கேட் பகுதியில் உள்ள எச்டிஎப்சி ஹவுஸ், மும்பை பிகேசியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி டவர்ஸ் உள்பட வெடிகுண்டு இருப்பதாக 11 இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வங்கிகள் உள்பட வெடிகுண்டு இருப்பதாக கூறப்படும் அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லாததும், இந்த மிரட்டல் இ-மெயில் என்பது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மும்பையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.