தமிழக அரசு வெள்ள மீட்பு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தை பார்க்கும்போதும் மனதுக்கு வேதனையாக உள்ளது. வீடுகள் இடிந்துள்ளன. குழந்தைகளுக்கு பால் பவுடர் இல்லை. பெண்களுக்கு உடுத்ததுணி இல்லை. குளங்கள் உடைந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழக அரசு இன்னும் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். வெள்ள மீட்புபணிகளையும் சரிவர மேற்கொள்ளவில்லை.

வானிலை ஆய்வு மையத்தை குறை கூறுகிறார்கள். மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை என்று சொல்கிறார்கள். வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னால்தான் தடுப்பு நடவடிக்கை எடுப்பேன், மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் உதவி செய்வேன் என்றால் நீங்கள் எதற்கு?. மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் அவசரகால நிவாரணமாக கொடுத்துள்ளது. அடுத்து மத்திய குழுவின் அறிக்கைப்படி நிதி வழங்கப்படும். வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து, மத்திய குழுவுக்கும், மத்திய நிதியமைச்சருக்கும் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.