விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை என்று நாம் தமிழர் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மேலும், அதற்கான அரசியல் சூழலை முதலில் உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தனது ஆதர்ச நாயகனாக ஏற்று அரசியல் கட்சி நடத்தி வருபவர் சீமான். சீமானுடன் தனக்கு நெருக்கமான உறவு இருந்ததாக கூறி வரும் சீமான், இதுதொடர்பாக பல சம்பவங்களையும் பொதுக்கூட்டங்களில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிரபாகரன் தலைமையில் தனக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும், அவருடன் சேர்ந்து பல வகை உணவுகளை தான் சாப்பிட்டதாகவும் சீமான் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவின. இதற்கு மறுபுறம் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, பிரபாகரன் குறித்து பொதுவெளியில் பேசுவதை குறைத்துக் கொண்டார் சீமான்.
இந்நிலையில், பிரபாகரன் தொடர்பாக சீமான் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் கூறியதாவது:-
ஒரு ப்ரேவ் ஹார்ட் (Brave Heart) போல, ஒரு டென் கமாண்டன்ட்ஸ் (Ten commandants) போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆவணப்படமாக வர வேண்டும் என பிரபாகரன் ஆசைப்பட்டாரு. அதுக்காக தான் அவர் ஆணி வேர் எடுத்தாரு. அந்த திரைப்படம் எடுக்க பயிற்சி கொடுப்பதற்காக எங்க அப்பா பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர் அங்கே போனாங்க. இப்போது அப்படியொரு ஆவணப்படம் எடுக்க சரியான அரசியல் சூழல் இல்லை. அதை முதலில் உருவாக்கணும். பின்னர் அதை எடுக்கணும். ஆனால், அவருக்கு அது ஒரு பெருங்கனவாக இருந்தது. இவ்வாறு சீமான் கூறினார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏழை மக்கள் தடையற்ற மருத்துவ சேவையைப் பெற முடியாத வகையில், காலியாகவுள்ள அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் கடத்தி வருவதுகண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1752 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடைபெற்றுள்ள தேர்வின் மூலம் 1021 மருத்துவர்களை மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் முறையான உட்கட்டமைப்பின்மை, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் நிலவுவதாகவும் குற்றம்சாட்டிய சீமான், “அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலமற்ற தொண்டுதான் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படை காரணமாக உள்ளது. தனியார்துறையில் மருத்துவம் என்பது, பணம் கொழிக்கும் வணிகமாகிவிட்ட சமகாலத்தில், ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக அரசு மருத்துவர்களே உள்ளனர்” என்றும் விவரித்துள்ளார்.
அரசு மருத்துவர்களை போதிய அளவில் நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவதென்பது ஏழை மக்களின் நல்வாழ்வினை அலட்சியப்படுத்தும் கொடுஞ்செயலாகும் என்ற அவர், போதிய மருத்துவர்கள் இன்மையால் தற்போது பணியாற்றும் மருத்துவர்களின் பணிச்சுமை இருமடங்கு அதிகரித்துள்ளதால், அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர் என்றும் கூறினார். இதனால் அரசு மருத்துவ சேவையில் தடையும், தவறுதல்களும் நடைபெற்று, இறுதியில் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் கொடுமைகளும் நிகழ்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசு மருத்துவர்கள் தேர்வு முடிவுவை விரைவாக வெளியிட வேண்டுமெனவும் அதன் அடிப்படையில் காலியாகவுள்ள 1752 அரசு மருத்துவர் பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.