மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த்: ஓ.பன்னீர் செல்வம்!

2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் என ஓ.பன்னீர் செல்வம் பெருமைப்படுத்தியுள்ளார்.

விஜயகாந்த் அரசியலிலும் சினிமாவிலும் தடம் பதித்தார். அவர் கொட்டி கொடுத்தாலும் தமிழ் படத்தை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிக்காதவர். அது போல் விளம்பர படங்களில் கூட நடிக்காதவர். மேலும் 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி அடுத்த ஆண்டே சட்டசபை தேர்தலை சந்தித்தவர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொண்டர்களை களமிறக்கினார். விருத்தாசலத்தில் விஜயகாந்தே களமிறங்கினார். தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் போட்டியிட்ட தேமுதிகவினரில் விஜயகாந்த் மட்டும் வென்றார். அதுவும் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து வென்றார். அப்போது தேமுதிக எடுத்த வாக்குச் சதவீதம் 8.38 சதவீதம் ஆகும். அது போல் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடங்களில் கூட தேமுதிக வெல்லாவிட்டாலும் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 10.3 ஆக இருந்தது. புதிதாக தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு இந்த வாக்கு சதவீதம் பெரும் சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு ஒரு இடத்திலும் 2009 ஆம் ஆண்டு ஒரு இடத்திலும் வெல்லாமல் தேமுதிக இருந்தாலும் விஜயகாந்த் அசைக்க முடியாத போட்டியாளராக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருந்தார்.

அவரது செல்வாக்கால் மிரண்ட அதிமுக, திமுக, விஜயகாந்தை 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தது. அதில் அதிமுக வென்றது. 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தார் . அப்போது 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வென்றது. விஜயகாந்த் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார். திமுகவை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவரானார். இப்படிப்பட்ட சாதனைகளை படைத்த விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘விஜயகாந்தின் மரணம் தமிழகத்தில் இருக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பு நண்பர் சிறப்பு நடிகராக மட்டுமல்லாமல் தலைவராகவும் இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவுபவர். நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது அந்த சங்கத்தின் கடன்களை தீர்த்தவர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பான முறையில் செயல்பட்டார். 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.