கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொது மக்கள் வந்து அஞ்சலி செலுத்த போதிய இட வசதி இல்லாததால் தீவுத் திடலில் அஞ்சலிக்காக வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் அவரது உடல் வாகனம் மூலம் தீவுத் திடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. 6 மணியளவில் தீவுத் திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் தீவித் திடலில் குவிந்து வருகின்றனர்.
மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலிக்கு வைக்கப்படும். அங்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.1 மணிக்குப் பின் இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக விஜயகாந்த் உடலை பொது இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக ராஜாஜி மண்டபத்தில் அவரது உடலை வைக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் அதை மறுத்துவிட்டு தீவுத்திடலில் அவரது உடலை அஞ்சலிக்காக வைத்துள்ளனர்.
விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.
இதையடுத்து சென்னை தீவுத்திடலில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.