கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது: வேல்முருகன்!

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய வல்லரசின் தமிழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங்குளம் அணு உலையாகும். தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடையில்லாத மின்சாரத்தை வழங்குவது தான் இந்திய ஒன்றிய அரசின் திட்டம். தற்போது தமிழ்நாடு அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமல், ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை அதிகார்ப்பூர்வமாக வெளியிடாமல், கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பது தொடர்பாக, 26.12.2023 அன்று, இந்தியா – ரஷ்யா நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாஸ்கோவில் நடந்த இந்திய மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மக்களிடம் உரையாடிய போது, என் முன்னிலையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

காலநிலை பருவ மாற்றம் குறித்து வாய் கிழிய பேசி வரும் ஒன்றிய அரசு, கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைத்தால் பருவ மாற்றம் சீர்கெடுவது குறித்து சிந்திக்காதது ஏன்? இது நீண்ட நெடிய வரலாறு கொண்ட மக்கள் வாழும் தமிழ்நாடா? அல்லது ஒன்றிய அரசின் குப்பைத் தொட்டியா? எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கும், கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனத்தால் வாயுகசிவு ஏற்பட்டதற்குமே, என்ன செய்வதறியாமல் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் வேறு! இந்திய – ரஷ்யா ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணுவுலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ தொடங்கப்படுவது என்பது சுற்றுச்சூழலுக்கும், மனித சமூகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.ஏற்கனவே, கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இரு அணுவுலைகளையும், மேலும் 4 உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் நிறுத்தக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது.

2018ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் பா.ஜ.க. முதலமைச்சர் விஜய் ரூபானி பவாநகர் மாவட்டத்தின் மிதிவிர்தியில் அமையவிருந்த அணுவுலைக்கு எதிர்ப்பு கிளம்பியபோது இப்போது மட்டுமில்லை எப்போது இத்திட்டம் செயல்படுத்தப்படாது என அறிவித்தார். கோலார் தங்க சுரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவுகளைப் பாதுகாக்க முடிவெடுத்தபோது கர்நாடக பா.ஜ.க. அதைக் கடுமையாக எதிர்த்தது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அத்திட்டங்களைக் கைவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஆனால், இந்திய வல்லரசிடம் எப்போதும் இருக்கும் தமிழினப் பகைப் போக்கால், தமிழ்நாட்டில் மட்டும் அணுவுலைகளையும், அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜனநாயக விரோதமானது மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை, ஆகிய விவகாரங்களில் பொதுமக்கள் நலனுக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கும் எதிராகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் நலனுக்காக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கெனவே, கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராகப் போராடி பல்வேறு வழக்குகளைச் சந்தித்த உள்ளூர் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிய உலைகளை அப்பகுதியில் அமைக்கும் செய்தி பேரிடியாக விழுந்துள்ளது. எனவே, தமிழினத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகளை தடுத்து நிறுத்துவதோடு, ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் அணுவுலைகளையும் நிரந்தரமாக இழுத்து மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே நேரத்தில், ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு, தமிழ்நாட்டு இளைஞர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.