அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி எம்.பி. சஞ்சய் ரராவத், “வரும் மக்களவைத் தேர்தலில் ராமரை பாஜக வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சமுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி அங்கு செல்வதற்கு முன்பாக சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (டிச.30) கூறுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் ராமரை பாஜக வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சமுள்ளது. அந்த அளவுக்கு ராமர் கோயில் விவகாரம் அரசியலாக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழா, தேசிய விழா இல்லை அது பாஜக விழா என்று அவர் தெரிவித்திருந்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராமர் கோயில் திறப்புவிழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், “நிச்சயமாக தாக்கரே கலந்து கொள்வார். ஆனால், பாஜகவின் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பே கலந்து கொள்வார். பாஜக நிகழ்வில் ஒருவர் ஏன் கலந்து கொள்ள வேண்டும். இது தேசிய நிகழ்ச்சி இல்லை. ராமர் கோயில் விழா தொடர்பாக பாஜக பேரணிகள், பிரச்சாரங்கள் நடத்துகின்றன. ஆனால் அதில் தூய நிலைப்பாடு எங்கே இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.