அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச்செயலாளர் கலந்து கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘அதிகனமழையாலும் – வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி – தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் – தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதல்-அமைச்சர் , அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.